Share to: share facebook share twitter share wa share telegram print page

நாக்கு

மனித நாக்கு

மாந்தர்களில் நாக்கு அல்லது நாவானது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவை பற்கள் மெல்லுவதற்குத் ஏற்றார்போல் நகர்த்தியும், புரட்டியும், திருப்பியும் தரும் உறுப்பு. மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளுவதும் நாக்கே. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும். நாக்கின் மேற்புறத்தில் சுவையுணர் நுண்புடைப்புகள் பல உள்ளன. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே வெவ்வேறு வகையான ஒலிகள் எழுப்பி மொழி பேசுவதற்கும் நாக்கு மிகவும் துணை செய்கின்றது. தமிழில் வழங்கும் ழகரம், ளகரம், லகரம், நகரம் முதலிய எல்லா எழுத்தொலிகளையும் பலுக்கிப் பார்த்தால் மொழி பேசும் பொழுது நாவின் பணி தெளிவாக விளங்கும். வாயில் ஊறும் உமிழ்ந்நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக இருக்கும்.

நாக்கின் மேல்புறத்தில் உள்ள தட்டையான நாமுடிப்பு. நாவின் குறுக்குவெட்டுத்தோற்றம்

உடலில் உள்ள தசைகளில் நாக்கு வலிமையான தசைகளில் ஒன்று. உடம்பிலேயே தொடு உணர்ச்சி மிக்க உறுப்பு நாக்கின் நுனி ஆகும். நாக்கின் மேற்புறத்தில் உள்ள நுண்புடைப்புகளில் நான்கு வகையான நுண்புடைப்புகள் உள்ளன. சுவையுணர் நுண்புடைப்புகளுக்கு நாமுடிப்பு என்று பெயர். நாமுடிப்புகளின் அமைப்பைப் பொருத்து அவை இனிப்பு, புளிப்பு, கசப்பு, கரிப்பு, உமாமி ஆகிய ஐந்து வகையான சுவைகளை தனித்தனியாகவும் கூட்டாகவும் உணர்வதாக அறிவியாளர்கள் அறிந்துள்ளனர். அண்மைக்காலம் வரையிலும் நாவின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு சுவைகளை உணர்வதாகத் தவறாக பாடநூல்களில் இருந்து பொதுஅறிவுக் கட்டுரைகள் வரை எங்கும் எழுதப்பட்டு வந்தது. தனித்தனி சுவைகளை உணர நாவினில் தனியான இடங்கள் ஏதும் இல்லை. சுவையை உணர மூக்கால் நுகர்வதும் இன்றியமையாதது.

நாவின் நுண்புடைப்புகளாகிய நாமுடிப்புகளின் நான்கு வகைகளில் ஒருவகையான நாமுடிப்பு மெல்லிய இழைபோல் உள்ளது ( iliform) , இன்னொருவகையான நாமுடிப்பு, நாய்க்குடை அல்லது காளான் போல் தலைப்பகுதி பருத்து உள்ளது (fungiform). மூன்றாவது வகை நாமுடிப்பு ஒரு வளையம் போன்ற வடிவில் உள்ளது. இதுவே நாமுடிப்புகளில் பெரியது (circumvallate). நான்காவது வகை தட்டையாக உள்ளது (foliate).

விலங்குகளின் நாக்குகள்

ஊர்வனவற்றின் நாக்குகள்

பல்லியைப்போல பூச்சிகளை உணவாகக் கொள்ளும் பல விலங்குகள் ஒரு தனிப்பட்ட தகவமைப்பைக் கொண்டுள்ளன. அதாவது அந்த விலங்குகளின் நாக்கானது பசைத் தன்மை கொண்டதாக இருக்கும். ( எ.கா. பல்லி, தவளை, பச்சோந்தி முதலியன ) இந்தப் பண்பினால் இவை நாக்கை நீட்டும்போது பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்கின்றன.[1]

அதேபோல பாம்புகள் போன்ற ஊர்வன விலங்குகளின் நாக்கானது இரண்டாக பிளவுபட்டு இருக்கும். இதுபோன்ற விலங்குகளுக்கு மோப்பத் திறன் குறைவாக இருக்கும். ஆனால் மோப்பத்தை உணரும் விதமாக இவற்றின் நாக்கு தகவமைப்பு கொண்டுள்ளது. இதனால் இவை தங்களது நாக்கை அவ்வப்போது வெளியே நீட்டி தங்களது இரு பக்கங்களில் இருந்து வரும் வாசனையை உணர்ந்து செயல்படுகின்றன.[2]

துணுக்குக் குறிப்புகள்

  • நீளமான நாக்கு: ஸ்டீஃவன் டெய்லர் என்பவர் உலகிலேயே மிக அதிக நீளமான நாக்குடைய மனிதர். இவருடைய நாக்கின் நீளமானது நாக்கின் நுனியில் இருந்து மூடிய வாயின் உதட்டின் நடுப்பகுதி வரை 9.5 செ.மீ ஆகும். ஆனிக்கா இர்ம்லர் என்னும் பெண்மணியின் நாக்கின் நீளம் 7 செ.மீ ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?
  2. டிங்குவிடம் கேளுங்கள்: பாம்பின் நாக்கு இரண்டாகப் பிளந்திருப்பது ஏன்?, இந்து தமிழ், 2020 பெப்ரவரி, 19
Kembali kehalaman sebelumnya